
புதுடெல்லி: அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அவசரக் கடிதம் எழுதி, பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் புகாரளிக்கக் கோரியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, பாம்புக்கடி தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பாம்புக்கடி என்பது பொது சுகாதாரப் பிரச்னை. சில சந்தர்ப்பங்களில், அவை மரணத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள், பழங்குடியினர் உள்ளிட்டோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாம்புக்கடி பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய சுகாதார அமைச்சகம், சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து, 2030-க்குள் இந்தியாவில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகளை பாதியாக குறைக்கவும், பாம்புக்கடியால் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தேசிய செயல்திட்டத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி, பாம்புக்கடி மேலாண்மை, கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல்வேறு பங்குதாரர்களின் பொறுப்புகளை திட்டம் வரையறுக்கிறது. இது பாம்புக்கடி மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் கண்காணிப்பை பலப்படுத்துவதோடு, பாம்புக்கடி சம்பவங்கள் மற்றும் இறப்புகளை துல்லியமாக கண்காணிக்க உதவும் என்பதும் சந்தேகமே.
மேலும், பாம்புக்கடி சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து அரசிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். இதற்கு, பாம்புக்கடி மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளை மாநில பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் “அறிவிக்கக்கூடிய நோயாக” மாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.