
சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செல்ல.ராசாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் சுமார் 450 கிரஷர்களுக்கு எம் சாண்ட், பி சாண்ட் எனப்படும் செயற்கை மணலை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் அனுமதி பெறாமல் தரமற்ற கற்களை அரைத்து எம் சாண்ட் என விற்பனை செய்கின்றனர். ஆற்று மணல் இல்லாத நிலையில், வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு தரமில்லாத எம் சாண்ட் பயன்படுத்தப்படும் போது, கட்டடம் உறுதி இல்லாததால் இடிந்து விழுந்து சேதம் ஏற்படுகிறது. எனவே, விதிகளை மீறி செயல்படும் குவாரி கிரஷர்கள் மற்றும் குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமலாக்கத்துறையின் சோதனையால் மணல் குவாரிகள் செயல்படாத சூழ்நிலையை பயன்படுத்தி குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 25-ம் தேதி கரூரில் நடந்த கூட்டத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்த்தப்படுவதாக அறிவித்தனர். ஒரு யூனிட் 1,200 வரை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர். இது கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் பாதிக்கும். இந்த விலை உயர்வை திரும்ப பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.