ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான ஃபென்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்கு பிறகு இன்று கடலுக்கு சென்றனர். வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் அதிகபட்சமாக 65 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, நவம்பர் 24-ம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டதோடு, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான அனுமதி டோக்கனையும் மீன்வளத்துறை ரத்து செய்துள்ளது. இதையடுத்து, நவம்பர் 25-ம் தேதி பாம்பன் துறைமுகத்தில் முதல் புயல் கூண்டும், நவம்பர் 27-ம் தேதி மூன்றாவது புயல் கூண்டும் ஏற்றப்பட்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஃபென்சல் புயலாக வலுப்பெற்று புதுச்சேரி அருகே கரையை கடந்தது. ஞாயிற்றுக்கிழமை பாம்பனில் மூன்றாவது புயல் கூண்டு ஏற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் பாக் ஜலசந்தியில் தொடர்ந்து 8 நாட்களுக்குப் பிறகு திங்கள்கிழமை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 1,000-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்றனர். மேலும், பாம்பன் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்ல உள்ளனர்.