சென்னை: மாநகராட்சி சார்பில் தெருவோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமை டிச.31 வரை நீட்டித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விற்பனையை ஒழுங்குபடுத்தவும், சட்ட விதிகளின்படி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியில் பதிவு செய்துள்ள 32,796 தெருவோர வியாபாரிகளின் விற்பனையை முறைப்படுத்த, சிப் மற்றும் கியூஆர் குறியீடு, இணையதள இணைப்புடன் கூடிய புதிய நவீன அடையாள அட்டை வழங்க, நவ., 6-ல் நடந்த, நகர விற்பனை குழு 8-வது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான சிறப்பு முகாம், நவ., 22-ல் துவங்கியது. மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், நவ., 30 வரை சிறப்பு முகாம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை, 5,186 வியாபாரிகள் மட்டுமே நவீன அடையாள அட்டை பெற்றுள்ளனர். இன்னும் 27,610 வழங்க வேண்டும். எனவே, இந்த சிறப்பு முகாம் செயல்படும் காலம் டிச., 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
இதில், சாலையோர வியாபாரிகள், மாநகராட்சி வழங்கிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, செல்லிடப்பேசி ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மொபைல் ஃபோன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த மொபைல் போன் எண், மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டை சேகரிக்கப்பட்டு, புதிய அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.