ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலேரி, சிங்கிலிபாடி, எடையார்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பொன்னி, பாபட்லா உள்ளிட்ட நெல் பயிர்கள் ஓரிரு நாளில் அறுவடைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மேற்கண்ட கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும், விளை நிலங்களில் இருந்து தண்ணீர் வடியாததால், நெல் மணிகள் அழுகி வருகின்றன.
விவசாயிகள் ரூ. 35 ஆயிரத்தில் இருந்து ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவிட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் நெல் சாகுபடிக்கு செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.