புதுடெல்லி: ரியாசி மாவட்டத்தில் உள்ள புனி பகுதியில் ஷிவ் காரியில் இருந்து கத்ராவுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பேருந்து கவிழ்ந்து பல அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. ஜூன் 9 அன்று நடந்த இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் இறந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஹகின் டின் என்ற ஹகம் கான் கடந்த ஜூன் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரஜோரி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) தீவிர சோதனை நடத்தினர். ரியாசி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து ஆயுதங்களை வழங்கியதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு (எஸ்எஸ்பி) மோஹிதா சர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஹகின் டின், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டுமின்றி, இந்த தாக்குதல் திட்டத்தை எளிதாக செயல்படுத்த தேவையான தகவல்களையும் அளித்துள்ளார். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரஜோரியில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தப்படும். அவர் கூறியது இதுதான்.