
சென்னை: தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கிராம சுகாதார செவிலியர்களாக பணி வழங்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பிரேமா தலைமை வகித்தார்.
அப்போது, அரசு துணை சுகாதார நிலையங்களில் உடனடியாக வேலை வழங்கக் கோரி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பிரேமா கூறியதாவது:-

கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற 1,800 அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க சுகாதாரத்துறை காலதாமதம் செய்கிறது. அங்கன்வாடிப் பணியாளர்களாகப் பணிபுரியும் போது வேலையில் இருந்து வரும் சம்பளத்தை விட்டுவிட்டு 2 ஆண்டுகள் கிராம சுகாதார செவிலியராகப் படித்தோம். ஆனால், 2021-ம் ஆண்டு முதல் பயிற்சி முடித்த யாருக்கும் கிராம சுகாதார செவிலியராக பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
இதனால் பயிற்சி முடித்த அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 2 ஆண்டுகளாக பயிற்சிக்கு சென்ற எங்களுக்கு அங்கன்வாடி மையத்தில் சம்பள உயர்வு உள்ளிட்ட எந்த சலுகையும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலரை சந்திக்க உள்ளோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.