மகாராஷ்டிரா: அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே அவரது பினாமி வழக்கில் தொடர்புடைய ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. 10 நாட்களாக நீடித்த குழப்பத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 3 வது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார்.
என்சிபி பிரிவு தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வர் ஆனார். கடந்த முறை முதல்வராக இருந்த சிவசேனா பிரிவு தலைவர் ஷிண்டே துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே அவரது பினாமி வழக்கில் தொடர்புடைய ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பினாமி சொத்துக்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2021 ஆம் ஆண்டு ஆளும் காங்கிரஸ்- சிவசேனா கூட்டணியில் இருந்தபோது அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை துறை சோதனை நடத்தியது. இந்த பினாமி சொத்துக்கள் வழக்கில் சதாராவில் உள்ள சர்க்கரை ஆலை, டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கோவாவில் உள்ள ரிசார்ட் உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சரத் பவார் தலைமையிலான கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு, அஜித் பவார் மீதான மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் துணை முதல்வராகப் பதவியேற்ற அடுத்த நாளே அவரது ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை நேற்று விடுவித்துள்ளது.
எந்த ஒரு சொத்தும் அஜித் பவார் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பினாமி சொத்துக்களுக்கும் அஜித் பவார் குடும்பத்துக்கும் இடையே எந்த தொடர்பையும் உறுதி செய்ய போதிய ஆதாரம் இல்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.