பீகார்: ரெயில்கள் செய்ய குரங்குகளால் தடை… பீகாரில் வாழைப்பழத்துக்காக 2 குரங்குகள் போட்ட சண்டையால் பல ரெயில்கள் செல்வதில் தடை ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் எண் 4க்கு அருகே வாழைப்பழத்துக்காக இரண்டு குரங்குகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அவற்றில் ஒன்று ரப்பர் பொருள் ஒன்றை மற்றொன்றின் மீது வீசியது. அந்த பொருள் மின்சார மேல்நிலைக் கம்பியின் மீது படவே அதில் கோளாறாகியுள்ளது.
கம்பி அறுந்து விழுந்ததால் அந்த பிளாட்பார்மில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில்வே ஸ்டேஷன் மின்சார துறையினர், கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக பிரச்சனையைச் சரிசெய்த பிறகு பீகார் சம்பர்க் கிராந்தி ரெயில் தாமதமாக கிளம்பியது.
அதன்பின் மற்ற ரெயில்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் சமீபத்தில் குரங்குகளால் சில பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டபோது அவை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டன. இருப்பினும் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.