கிருஷ்ணகிரி: ஜாகீர் வெங்கடாபுரம் அடுத்த குல்நகரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக வனப்பகுதிகளை கொண்ட மாவட்டம். அங்குள்ள வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. கிருஷ்ணகிரி பகுதியில் ஜாகீர் வெங்கடாபுரத்தை அடுத்த குல்நகர், அதியமான் நகர் போன்ற குடியிருப்பு மற்றும் அரசு பள்ளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடமாடியது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, சிறுத்தையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர். வனத்துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.