திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், கோன்னி மல்லேசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஈப்பன் மத்தாய் (63). இவரது மகன் நிகில் (29) கனடாவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நிகிலுக்கும், மல்லேசேரி பகுதியை சேர்ந்த பிஜூ ஜார்ஜ்(58) மகள் அனுவுக்கும் கடந்த மாதம் 30-ம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அதையடுத்து நிகில், அனு இருவரும் கடந்த வாரம் தேனிலவை கொண்டாட மலேசியா சென்றனர்.
இருவரும் தேனிலவை முடித்துக் கொண்டு இன்று காலை கேரளா திரும்பினர். அவர்களை அழைத்து வருவதற்காக ஈப்பன் மத்தாய் மற்றும் பிஜூ ஜார்ஜ் ஆகியோர் காரில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றனர். பின்னர் நால்வரும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை பிஜு ஜார்ஜ் ஓட்டினார். அதிகாலை 4 மணியளவில் பத்தனம்திட்டா மாவட்டம் கூடல் பகுதியில் உள்ள புனலூர் – மூவாற்றுப்புழா நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த தெலுங்கானா ஐயப்ப பக்தர்கள் பேருந்து மீது கார் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த தாக்கத்தில் கார் நொறுங்கியது. இந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீட்புப் பணியைத் தொடர்ந்தனர். இந்த விபத்தில் ஈப்பன் மத்தாய், பிஜூ ஜார்ஜ், நிகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அனு உயிரிழந்தார்.
அவரது வீட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் புதுமண தம்பதியின் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து குறித்து கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்த பிஜூ ஜார்ஜ் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.