அதிமுகவை பாமக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவினர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து வாக்காளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகளிடையே போட்டி உருவாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதா படத்தை வைத்து பிரச்சாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி தெரு தெருவாக பிரசாரம் செய்து வருகிறார். அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உருவப்படமும் பாமகவின் பிரச்சாரக் கூட்டங்களின் பேனரில் இடம்பெற்றுள்ளது. எனவே தேர்தலை புறக்கணித்த அதிமுகவின் வாக்குகளை கவர பாமக திட்டமிட்டு பிரசாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாமகவுக்கு அதிமுக வாக்களிக்க வேண்டும் என்றும் எங்கள் பொது எதிரி திமுக தான் என்றும் பிரசார கூட்டத்தில் அன்புமணி பேசினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் விக்கிரவாண்டி மாவட்ட செயலாளர் முதல் கிளை செயலாளர் வரை அனைத்து நிர்வாகிகளிடமும் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது, அதிமுகவின் வாக்குகள் பாமகவுக்குப் போகக் கூடாது என்றும், தேர்தல் புறக்கணிப்பைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
எடப்பாடி முக்கிய உத்தரவு
அதே சமயம் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சி எடுத்துள்ளது. நாம் தமிழ் நிர்வாகிகள் நேரடியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் மூலம் அதிமுகவின் வாக்குகளை தங்கள் கட்சிக்கு இழுக்க திட்டமிட்டுள்ளனர். எனவே அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தாலும் விக்கிரவாண்டி தொகுதி அதிமுகவினர் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.