திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமிக்கு சேவைகள் தொடங்கும். ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் வழங்கும் திருப்பாவை பாசுரங்கள் பாடி ஏழுமலையான் எழுந்தருள்வார் என்பது நம்பிக்கை.
இந்த திருப்பாவை சேவை இன்று காலை முதல் தொடங்குகிறது. மார்கழி மாதம் நேற்று 16-ம் தேதி காலை 6.57 மணிக்கு பிறந்ததால், அதற்குள் சுப்ரபாத சேவை நடத்தப்பட்டது. 12 ஆழ்வார்களில் பெண் ஆழ்வார் என்று போற்றப்படும் ஆண்டாள் வழங்கும் திருப்பாவை பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் (ஜனவரி 14 வரை) பாடப்படும். அதன்பிறகு ஜனவரி 15-ம் தேதி முதல் சுப்ரபாதா சேவை வழக்கம் போல் தொடரும்.
மேலும், இந்த மார்கழி மாதத்தில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் இரவு நடைபெறும் ஏகாந்த சேவையில் ஸ்ரீநிவாச மூர்த்திக்குப் பதிலாக ஸ்ரீ கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரச்சார பரிஷத் அமைப்பு சார்பில் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள அனைத்து கோவில்களிலும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை திருப்பாவை சேவை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.