சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 1,305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. 108 வைணவத் தலங்களில் சிறப்பு வாய்ந்த இக்கோயில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் முதியோர்கள் மற்றும் நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் சேவை இயங்கி வருகிறது.
இதில், மலைக்கு செல்ல ரூ.50 வசூலிக்கப்படுகிறது. மலையிலிருந்து திரும்ப 50 ரூபாய். ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டதையடுத்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரோப்கார் பராமரிப்பு பணி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்றுமுன்தினம் முதல் நாளை வரை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்தது. ரோப் காரை இயக்கும் மோட்டார், கியர், ஷாஃப்ட், வயர் ரோப், பெட்டிகள், டவர் ஆகியவற்றை பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நாளை நிறைவடைகிறது. நாளை மறுநாள் முதல் ரோப்கார் சேவை வழக்கம் போல் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.