சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த 3 மாதங்களில் 91.6 சதவீத ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பல்வேறு வழித்தடங்களில் தாமதமின்றி இயக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரயில் பாதைகளை மேம்படுத்தவும், நவீன சிக்னல்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தவும் பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், ரயில்களின் நேரப்படியில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் 91.6 சதவீத ரயில்களை சரியான நேரத்தில் இயக்கி சாதனை படைத்துள்ளது தெற்கு ரயில்வே. 2023ல் இது 90 சதவீதமாக இருந்தது.
ஒவ்வொரு மாதமும் 10,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இந்த நிலையை எட்டுவது மிகவும் சாதனையாகும். இது முக்கியமாக திறமையான கண்காணிப்பு மற்றும் சிறந்த பாதை பராமரிப்பு காரணமாகும்.
தெற்கு ரயில்வே மாதத்திற்கு சராசரியாக 10,712 ரயில்களைக் கையாளுகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், தெற்கு ரயில்வேயில், 27,631 ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டன. கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேயை விட, தெற்கு ரயில்வே அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.