சென்னை வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் மாசுபாட்டை சீரமைப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 2020-ம் ஆண்டு, ஏரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்படுவதாக வெளியான செய்தியின்படி பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தனிநபர் தொடர்ந்த வழக்குகளுடன் இணைந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில், வேளச்சேரி ஏரியின் உண்மையான பரப்பளவு 107.48 ஹெக்டேராக இருந்த நிலையில், அரசு துறைகளுக்கான நில ஒதுக்கீடுகளால் ஏரியின் பரப்பளவு 22.4 ஹெக்டேராக குறைந்துவிட்டது. அதேபோல், ஏரியின் நீர் கொள்திறன் கணிசமாக குறைந்துள்ளதோடு, பல்வேறு வடிகால்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஏரியில் கலப்பதால் மாசுபாடு அதிகரித்துள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், வேளச்சேரி ஏரியை ஆழப்படுத்தி சீரமைப்பதற்காக ரூ. 23.5 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தலைமைச் செயலர் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு தரவுகளின்படி, ஏரியில் 962 ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் 54 வணிக பயன்பாட்டு கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்று இடம் வழங்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் நிலுவை நிலைமையால் பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் கே. சத்யகோபால் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான அறிக்கையை அடுத்த விசாரணைக்கு முன்பாக தாக்கல் செய்ய அரசுத் தரப்பு உறுதியளித்ததை தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.