அமராவதி: ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு 10 மாவட்டங்களுடன் தனி மாநிலமாக 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு பொதுத் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்றும், அதன்பிறகு தெலுங்கானாவின் தலைநகராக மட்டுமே ஹைதராபாத் இருக்கும் என்றும் பிரிப்பு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, ஐதராபாத் நகரின் முழு உரிமையும் தற்போது தெலுங்கானாவுக்கு வந்துள்ளது. இதேபோல், இரு மாநிலங்களுக்கு இடையே அரசு ஊழியர்கள் பங்கீடு, நதிநீர் பங்கீடு, மின் பகிர்மானம் என பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இவை அனைத்திற்கும் ஓரளவு தீர்வு காணப்பட்ட நிலையில், கிருஷ்ணா நதி நீர் பிரச்சனை மட்டும் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.
இதேபோல், கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலங்களை தெலுங்கானாவுடன் இணைக்க வேண்டும் என்று தெலுங்கானா அரசு கோரி வருகிறது. ஆனால் ஆந்திர அரசு இதை ஏற்கவில்லை. இந்த பிரச்னையும் நிலுவையில் உள்ளது. ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “எங்கள் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் சுமூகமான பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும். வரும் 6ம் தேதி ஐதராபாத்தில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். சந்திரபாபுவின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் வட்டாரத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.