லக்னோ: மதமாற்றத்தை அனுமதித்தால், நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் இருந்து டெல்லியில் நடந்த கிறிஸ்தவ பிரச்சார கூட்டத்திற்கு மக்களை மதமாற்றம் செய்ய அழைத்துச் சென்றதாக கைலாஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைலாஷ் மீது மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைலாஷ் ராம்காலியை டெல்லியில் ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அதன் பிறகு ராம்காலி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக ராம்காளியின் சகோதரர் பிரஜாபதி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கைலாஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.கே. கிரி வாதிடுகிறார், “இதுபோன்ற கூட்டங்கள் மற்றும் மாநாடுகளின் போது பலர் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள். இதே நிலைதான் ராம்காலி விவகாரத்திலும் நடந்துள்ளது. கைலாஷ் தனது கிராமத்திலிருந்து பலரை அழைத்துச் சென்றுள்ளார். இதை தடுக்க வேண்டும்,” என்றார்.
கைலாஷ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் சாகேத் ஜெய்ஸ்வால், “கைலாஷ் இந்து மக்களை அழைத்து சென்று கிறிஸ்தவர்களாக மாற்றவில்லை. ராம்பால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறவில்லை. அந்த கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டார். இதில் பாதிரியார் சோனு கலந்து கொண்டு பேசினார். அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், “அரசியலமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவு, ஒருவரது தொழிலை மேற்கொள்ளவும், சுதந்திரமாக கருத்து தெரிவிக்கவும், மத நம்பிக்கைகளை பரப்பவும் உரிமை வழங்குகிறது. ஆனால் மதமாற்றத்திற்கு அனுமதி வழங்கவில்லை. பிரச்சாரம் என்ற சொல்லுக்கு ஊக்குவிப்பது என்று பொருள். ஆனால், எந்த ஒரு மனிதனையும் அவனது மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாற்றுவது என்று அர்த்தம் இல்லை. மதமாற்றத்தை அனுமதித்தால் நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மை மக்களாக மாறுவார்கள்.
அதே போல் மத மாற்றங்களும் தடை செய்யப்பட வேண்டும். மதமாற்றம் அல்லது மதமாற்றத்தை ஊக்குவிக்கும் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நிறுத்தப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஏழை மக்களைப் பணத்தால் மதமாற்றம் செய்வது பரவலாக நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.