பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், மத்திய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கிராமங்கள் மற்றும் கோவை, திருப்பூர், பழனி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, வால்பாறை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதில், பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சமத்தூர், அங்கலக்குறிச்சி, ஆழியார், அட்டகட்டி வழியாக வால்பாறை செல்லும் அரசு பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருவதாலும், பனிப்பொழிவும் அதிகரித்து வருவதாலும் ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப்பாதையில் பகலில் கூட பனிமூட்டம் காணப்படுகிறது. எனவே, மலைப்பாதையில் செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
நகரில் உள்ள இரு பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதில், மலைப்பகுதியான வால்பாறைக்கு, குறிப்பிட்ட நேரத்தில், ஒரு நாளைக்கு ஒருமுறை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இருப்பினும் பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மலைப்பாதையில் செல்லும் பஸ் டிரைவர்கள் மின்விளக்குகளை எரிய வைத்து வேகத்தை குறைத்து கவனமாக ஓட்ட வேண்டும். அடர்ந்த பனிமூட்டம் காரணமாக எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் சில சமயங்களில் கண்ணுக்கு தெரியாத நிலையில் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்றார்.