திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று ஆரண்முளாவில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட தங்க அங்கி ஊர்வலமாக புறப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 16-ம் தேதி தொடங்கிய மண்டல பூஜைகள் 26-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.
இந்த ஆண்டு மண்டல பூஜைகளுக்கான நடை கடந்த நவம்பர் 15-ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று வரை கடந்த 38 நாட்களில் கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. உடனடி முன்பதிவு மூலம் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சபரிமலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இரவு 7 மணி வரை 65,000-க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். மண்டல பூஜையையொட்டி ஐயப்பன் சிலைக்கு தங்க அங்கி அலங்காரம் செய்வது வழக்கம். இந்த தங்க அங்கி நேற்று ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இந்த தங்க அங்கி வரும் 25-ம் தேதி மாலை சன்னதியை சென்றடையும். பின்னர் ஐயப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். நாளை மறுநாள் (26-ம் தேதி) பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. அன்றிரவோடு இந்த ஆண்டு மண்டல காலம் முடிவடைகிறது.
மண்டல பூஜையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க 25-ம் தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 26-ம் தேதி 60 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைனில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த இரண்டு நாட்களிலும், உடனடி முன்பதிவு மூலம் 5,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.