சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கரன் தலைமையில் வரும் 27, 28-ம் தேதிகளில் நடைபெறும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பணிமனையில் நடக்கும் பேச்சுவார்த்தை, 27-ம் தேதி தொமுச உள்ளிட்ட 13 கட்சி சார்புள்ள தொழிற்சங்கங்களுடனும், 28-ம் தேதி மீதமுள்ள 72 தொழிற்சங்கங்களுடனும் நடைபெறவுள்ளது.
ஊதிய உயர்வு குறித்து ஆலோசிக்க தொழிற்சங்கங்கள் இரண்டாகப் பிரிக்கப்படுவது இதுவே முதல்முறை. கடந்த முறை அடிப்படை ஊதியம் 5% உயர்த்தப்பட்ட நிலையில், தமிழக அரசிடம் 15% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.