சென்னை: வெளிப்படையான தேர்தல் முறையை ஒழிப்பதற்காக தேர்தல் நடத்தை விதி 93 (2) (அ) க்கு செய்யப்பட்ட ஆபத்தான திருத்தம் காரணமாக மத்திய பாஜக அரசிடமிருந்து ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் சிசிடிவி காட்சிகளை வழங்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளில் ஒன்றை அழித்துவிட்டது. பாஜக அரசின் அச்சம் ஹரியானா மாநிலத் தேர்தலோடு நின்றுவிடவில்லை, மகாராஷ்டிராவில் தேர்தலின் புனிதத்தைக் கெடுக்கும் சமீபத்திய போலி வெற்றிக்குப் பிறகு அவர்கள் அனுபவித்த பதற்றத்தின் பிரதிபலிப்பாகும்.
தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அழுத்தத்திற்குத் தேர்தல் ஆணையம் மனமுவந்து பணிந்து, சுதந்திரமான, நியாயமான தேர்தலை தன் சொந்தக் குழந்தையாகத் திரித்துக் காட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நமது நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு எதிரான இந்த ஜனநாயக விரோத தாக்குதலை எதிர்க்க பாஜக தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.