சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் புகாரின் பேரில் போலீசார் ஞானசேகரன் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. வரலட்சுமி என்ற பெண் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். போலீஸ் விசாரணையில் குறைபாடு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டிருந்தாலும், “சார்” என்று குறிப்பிடப்பட்டவர் மற்றும் அவரது பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து, வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து, நீதிபதிகள் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் கடிதத்தை ஏற்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, மாநகர போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்கவும், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.