சென்னை: விவேகானந்தரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கவர்னர் ஆர்.என்.ரவி: விவேகானந்தரின் நினைவுநாளில் அவருக்கு ஆழ்ந்த நன்றியுடனும் மரியாதையுடனும் தேசம் நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்துகிறது. அவர் பாரதத்தின் அனைத்தையும் உள்ளடக்கிய தர்மத்தின் ஆழத்தை உலகிற்கு வலிமையாக எடுத்துக்காட்டினார். பல நூற்றாண்டுகளாக அந்நிய ஆட்சியின் போது அழிந்து போன இந்தியர்களிடையே தேசியப் பெருமையை மீண்டும் எழுப்பினார்.
அது காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறவும், தேசத்தை வலுப்படுத்தவும் உதவியது. அவரது ஆன்மீகப் பயணம் தமிழ்நாட்டின் புனித பூமியுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்தது. உலகமே ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பம்) என்ற லட்சியத்துடன், பொருள் வளம், ராணுவ வலிமை, ஆன்மிக இரக்கம் கொண்ட உண்மையான வளர்ச்சி பெற்ற பாரதம் என்ற அவரது கனவை நனவாக்க இந்நாளில் நம்மை அர்ப்பணிப்போம்.
முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்: “காற்று என்னை உருக்காது, கத்தி வெட்டாது, நெருப்பு என்னை எரிக்காது, நான் சர்வ வல்லமை படைத்தவன் என்று நினைத்தால் நம் லட்சியத்தை தடையின்றி அடையலாம்” விவேகானந்தர். அவரது நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றி வணங்குவோம்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: விவேகானந்தர், தேச நலனுக்காகவும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்து, இந்தியாவின் ஆன்மிகம், கலாசாரத்தின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர். ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஆன்மிக வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் விளங்கிய விவேகானந்தரின் நினைவைப் போற்றுவோம். இவ்வாறு கூறினார்கள்.