செய்தி : இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான மின் மற்றும் மின்னணு சாதனங்கள் (கேட்ஜெட்ஸ்) அனைத்தும் ஸ்மார்ட்டாக மாறி சமத்து பிள்ளையாக அதன் பயனர் கொடுக்கும் கட்டளைக்கு இணங்க செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி, ஸ்மார்ட்ஸ்பீக்கர் வரிசையில் ஸ்மார்ட் LED விளக்குகளும் இந்த ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் பட்டியலில் அடங்குகின்றன. மின் விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கே அதன் பரிணாம வளர்ச்சி ஆச்சரியத்தை கொடுக்கலாம்.
வழக்கமாக மின் விளக்குகள் என்றால் அது கொடுக்கும் ஒளியை தான் நாம் பயன்படுத்துவோம். ஆனால் இந்த ஸ்மார்ட் விளக்குகளில் அதையும் கடந்து பல விஷயங்கள் அடங்கியுள்ளன. வாய்ஸ் அசிஸ்டன்ஸ் டிவைஸ் மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் இந்த ஸ்மார்ட் விளக்குகளை கட்டுப்படுத்தலாம். அதற்கு Wi-Fi இணைப்பு உதவுகிறது. அதன் மூலம் அந்த விளக்கின் ஒளி வண்ணத்தை மாற்றி அமைக்கலாம். தேவைப்பட்டால் அலாரம் கூட வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட ஸ்மார்ட் விளக்குகளை வாங்க வேண்டுமென்றால் வழக்கத்தை விடவும் கூடுதலாக கொஞ்சம் செலவு செய்ய வேண்டியுள்ளது.
இருப்பினும் பட்ஜெட்டுக்குள் அடங்கும் வகையிலும் சந்தையில் ஸ்மார்ட் LED விளக்குகள் கிடைக்கின்றன. பானாசோனிக், சிஸ்கா, சோலிமோ, ஹோம்மேட், பிலிப்ஸ், MI, ஹீலியா, விப்ரோ, ஹேவல்ஸ் கிளாமேக்ஸ் என பல முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலைக்குள் ஸ்மார்ட் LED விளக்குகளை விற்பனை செய்கின்றன. அதிகபட்சம் 500 ரூபாயில் தொடங்கி 1000 ரூபாய்க்குள்தான் இந்த பட்ஜெட் ரக ஸ்மார்ட் விளக்குகளின் விலை உள்ளது.
பெரும்பாலான வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள B22 பல்ப் ஹோல்டரிலேயே இந்த ஸ்மார்ட் LED விளக்குகளையும் பொருத்தலாம். நீண்ட நீடித்த ஆண்டு பயன்பாட்டுக்கான ஆயுட் காலம். சில நிறுவனங்கள் வாரன்டியும் கொடுக்கின்றன. பெரும்பாலும் 9 வாட்ஸ் திறன் கொண்ட பல்புகள் தான் ஸ்மார்ட் LED பல்ப் கேட்டகிரியில் ஆரம்பமாகிறது. ஸ்மார்ட்போன்களில் இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அப்ளிகேஷன்களை கொண்டு இந்த ஸ்மார்ட் LED விளக்குகளை ஆப்பிரேட் செய்யலாம். அதே போல ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலமாகவும் இந்த விளக்கை கட்டுப்படுத்தலாம்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இந்த ஸ்மார்ட் விளக்குகளை இயக்கம் SCHEDULE டைமிங் வசதியும் இதில் உள்ளது. அதனால் இனி வீட்டில் விளக்குகளை ஆன் செய்து வந்து விட்டோமே, கரண்ட் பில் அதிகமாகுமே என்பது மாதிரியான மறதிகளுக்கெல்லாம் தீர்வும் கொடுத்துள்ளது இந்த ஸ்மார்ட் விளக்குகள்.
மின் சாதன பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் மட்டுமே அல்லாது அமேசான், பிளிப்கார்ட் மாதியான விண்டோ ஷாப்பிங் வசதி மூலமாகவும் உட்கார்ந்த இடத்தில் இந்த ஸ்மார்ட் விளக்குகளை ஆர்டர் செய்து பெறலாம்.
இந்த மாதிரியான ஸ்மார்ட் LED விளக்குகளை வல்லுனர்களும், வடிவமைப்பாளர்களும் வடிவமைக்க காரணமே மின் ஆற்றலின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவதற்காகத் தான். இது மின் ஆற்றல் விஷயத்தில் மட்டும் அல்லாது உலக வெப்பமயமாதல் தொடங்கி அனைத்திலும் தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.
எப்படி முன்பெல்லாம் டியூப்லைட்டில் இருந்த ஆர்டினரி சோக் இப்போது எலக்ட்ரானிக் சோக்காகவும், LED டியூப் லைட்டாகவும் மாறியுள்ளதோ அது போல அடுத்து வரும் நாட்களில் ஆர்டினரி பல்புகளும் ஸ்மார்ட் பல்புகளாக மாறும். அப்போது இதன் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என சொல்கின்றனர் மின் மற்றும் மின் சாதன துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள்.
இனி மாயாஜால படங்களில் காட்டும் சித்து வேலை போல நினைத்து நேரத்தில் விளக்கை ஆன் அல்லது ஆப் செய்யலாம்.