ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 950 பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடியில் இரண்டு அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களை சோதனை செய்வதற்கான சோதனை சாவடியும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரக்கூடிய வாகனங்களை சோதனை செய்து வரி வசூலிக்கும் சோதனை சாவடியும் உள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை சோதனை செய்யும் சோதனை சாவடிகளில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. இங்கு லஞ்சம் வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையில் போலீசார் சுமார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.
இந்த விசாரணையில், கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் இருந்தது தெரியவந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல்குமார் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.