புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக தமிழர்கள் அஜய் திக்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி விபு பக்ரு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நீதிபதியாக பதவியேற்ற அஜய் திக்பால், 31 ஆண்டுகளாக வழக்கறிஞராக பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். 51 வயதாகும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர், தமிழகத்தின் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். பொள்ளாச்சியை சேர்ந்த நீதிபதி கே.வி. விஸ்வநாதன் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ளார்.
டெல்லியில் சட்டப்படிப்பை முடித்த ஹரிஷ், இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். உச்சநீதிமன்றம் உட்பட நாட்டின் பல உயர் நீதிமன்றங்களில் பல வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். நாட்டின் பிரபல வழக்கறிஞர்களான சோலி சொராப்ஜி, கே.கே. வேணுகோபால், சி.எஸ். வைத்தியநாதன் உள்ளிட்ட பல மூத்த நீதிபதிகளுடன் பணியாற்றியவர்.
நீதிபதியாக பதவியேற்கும் முன், மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். அயோத்தி வழக்கு, கோத்ரா கலவரம், ராணுவம் மற்றும் கடற்படை தொடர்பான வழக்குகள், எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் போன்ற வழக்குகளில் ஆஜராகியுள்ளார். இவர் பிரபல உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனின் மகன். நீதிபதி ஹரிஷ் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தியிலும் நன்றாக படிக்கவும் எழுதவும் தெரியும்.