சென்னை: நேர அட்டவணையை கடைபிடிக்காத அரசு பஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு ஏசி மற்றும் ஏசி இல்லாத பேருந்துகள், இருக்கைகள் மற்றும் ஸ்லீப்பர்கள் கொண்ட பேருந்துகள் உட்பட சுமார் 1,200 பேருந்துகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.
அரசு விரைவுப் பேருந்துகள் நேரத்தை வீணடிப்பதால், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதை விட ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு அரசு விரைவு பஸ்களை இயக்கும் டிரைவர்களே காரணம் என கூறப்படுகிறது. அதாவது டீசலை மிச்சப்படுத்த பஸ்களை வேகமாக ஓட்ட வேண்டாம் என்று கிளை மேலாளர்கள் கூறியதாக அந்த பஸ் டிரைவர்கள் பயணிகளிடம் கூறி தங்களின் தவறுகளை மூடி மறைக்கின்றனர்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டீசலை மிச்சப்படுத்த அரசு விரைவுப் பேருந்துகளை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் என்று இதுவரை அறிவுறுத்தப்படவில்லை. அதேநேரம், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தாமல் இருக்கவும், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடையும் வகையில் பேருந்துகளை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு தங்களது பயண அனுபவம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்க குறுஞ்செய்தி மூலம் இணைப்பு அனுப்பப்படும். இந்த இணைப்பின் மூலம் பேருந்து தாமதமாக வருவது, தூய்மையின்மை, ஓட்டுநர், நடத்துனர்களின் செயல்பாடுகள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்தை பாதுகாப்பாகவும், சரியான நேரத்திலும் இயக்காத டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் கூறினார்.