புரதச் சத்து அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும் என சமீபத்தில் பரவிவரும் கருத்துக்கு பிரதிபலித்து, மருத்துவர் அருண் குமார் அதன் உண்மை தன்மையை விளக்கியுள்ளார்.
புரதச் சத்து நம் உடலின் முக்கிய அங்கமாக இருக்கின்றது, ஏனென்றால் உடலின் அனைத்து செல், என்சைம்கள் மற்றும் ஹார்மோன்கள் புரதத்தினால் உருவாக்கப்படுகின்றன. ஒரு நபர் 60 கிலோ எடையில் இருந்தால், அவருக்கு ஒரு நாளைக்கு சுமார் 60 கிராம் புரதம் அவசியம். எனினும், புரதச் சத்து அளவு அதிகமாக இருந்தாலும், அது சிறுநீரகத்திற்கு எந்தவிதமான தீங்கு செய்யாது என்று டாக்டர் அருண் குமார் தெரிவிக்கின்றார்.
இருந்தாலும், சிறுநீரக பாதிப்புடன் இருக்கும் நபர்களுக்கு, புரதம் சரியாக வெளியேற்றப்படுவதில்லை. எனவே, அந்த வகையிலான நோயாளிகளுக்கு புரதத்தை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், சிறுநீரக பாதிப்புக்கு காரணமாக சர்க்கரை நோய் (70-80%) மற்றும் இரத்த அழுத்தம் (10-20%) முக்கிய பங்கினை வகிக்கின்றன. நல்ல புரதச் சத்து கொண்ட உணவுகளை உட்கொண்டு, மாவுச்சத்துகளை குறைத்தால், பலருக்கும் சிறுநீரக பிரச்சினைகள் தவிர்க்க முடியும் என டாக்டர் அருண் குமார் கூறுகின்றார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவாக அறிந்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுவது முக்கியம்.