காசா: ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட பணய கைதியை இஸ்ரேல் சடலமாக மீட்டுள்ளது. இதனால் மேலும் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பணய கைதிகளை மீட்கவும், போரை நிறுத்தவும் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட பணய கைதியை இஸ்ரேல் சடலமாக மீட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த பணய கைதியான யோசப் அல் சைதினியின் உடலை காசாவின் ரபா நகரில் உள்ள சுரங்கத்தின் உள்ளே இருந்து பாதுகாப்புப்படையினர் மீட்டனர். அதேவேளை, பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் மற்றொரு உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த உடலை அடையாளும் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் யோசப் அல் சைதினி மற்றும் அவரது மகன் ஹம்சி உள்பட 250க்கும் மேற்பட்டோர் காசா முனைக்கு பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர். தற்போது மற்றொரு உடல் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அது யோசப்பின் மகன் ஹம்சியின் உடலா? என்பது குறித்து பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.