தவெக ஆலோசனைக் கூட்டத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன. துணைச் செயலாளர்கள் மற்றும் பொருளாளர்களைத் தேர்ந்தெடுத்து ஜனவரி 20-ம் தேதிக்குள் தலைமைக்கு அனுப்புமாறு புஸ்ஸி ஆனந்த் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அருகே பனையூரில் உள்ள தவேக தலைமையகத்தில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன. அப்போது, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர்களாகச் செயல்பட விருப்பம் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா அக்னல் திடீரென கூட்டத்தை விட்டு வெளியேறினார். மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால், மேலும் சில பொறுப்பாளர்களும் அதிருப்தியில் வெளியேறியதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிருப்தியடைந்த நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர், ஜனவரி 20-ம் தேதிக்குள் 2 துணைச் செயலாளர்கள் மற்றும் ஒரு பொருளாளரைத் தேர்ந்தெடுத்து தலைமைக்கு விவரங்களை வழங்குமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
சமீபத்தில் வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாகவும் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளிடம் விளக்கினார். வெறுப்பு காரணமாக சிலர் அவதூறு பரப்புவதாகவும், கட்சி நிர்வாகிகள் அதில் கவனம் செலுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் விஜய் தனித்தனியாக ஆலோசனை நடத்தி, கட்சியின் முதலாமாண்டு விழாவின் போது அவர்களின் விவரங்களின் முழுமையான பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.