புது டெல்லி: பிரதமர் மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு விவசாயிகளிடம் பேச வேண்டும் என்று பிரியங்கா காந்தி வத்ரா ட்வீட் செய்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கடந்த 45 நாட்களாக பஞ்சாப் எல்லையின் கனோரி பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவாலின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
உச்ச நீதிமன்றம் அவரது மருத்துவ பராமரிப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால் நீதிமன்றம் அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடரலாம் என்றும் கூறியது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஒரு பதிவில், ‘காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
45 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஜக்ஜித் சிங் டல்லேவாலை கவனித்துக் கொள்ள பாஜக அரசு தயாராக இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட 750 விவசாயிகளின் உயிரை ஏற்கனவே பறித்ததற்கு அரசாங்கத்தின் பிடிவாதமே காரணம். விவசாயிகளுக்கு எதிராக ஏன் இவ்வளவு கொடுமை? பிரதமர் மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். மேலும் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.