கேரளா: கேரளாவின் பத்தனம்திட்டாவில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்தது 60 பேரால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக 4 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர். உடற்கல்வி பயிற்சியாளர், பள்ளி வகுப்புத் தோழர்கள் என 60க்கும் மேற்பட்டோர் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் 18 வயதாகி உள்ளதாக கூறப்பட்டது. 13 வயதில் இருந்து பலமுறை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பள்ளியில் நடந்த குழந்தைகள் நலக் குழுவின் ஆலோசனை நிகழ்வின்போது சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குணாதிசயங்களில் மாற்றம் இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பத்தனம்திட்டா குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ராஜீவ் கூறுகையில், பள்ளியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து கூறினார்.
இதையடுத்து, குழந்தைகள் நலக் குழு சார்பில் போலீசில் புகார் வழங்கப்பட்டது. விளையாட்டு வீராங்கனையான சிறுமி, பத்தனம்திட்டாவில் விளையாட்டு முகாம்கள் உட்பட பல இடங்களில் பயிற்சியாளர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
தன்னை துஷ்பிரயோகம் செய்த சுமார் 40 பேரின் எண்களை தனது தந்தையின் மொபைல் போனில் சிறுமி பதிந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமி உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் தீவிரமாகியுள்ளது