சென்னை: தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்-சைட் பதிவில், “தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் வருத்தமும், கண்டனத்துக்குரியதுமாகும்.
தொழிலில் ஒரு வழக்கறிஞர், அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்,” என, மாயாவதி கூறினார்.ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது? – பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆம்ஸ்ட்ராங் வழக்கம் போல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் தாக்கியது.
தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அரசியல் கட்சியின் மாநில தலைவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.