அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இலையூர் ஊராட்சியில் உள்ள 2000 -க்கும் மேற்பட்ட பெண்கள் 70 மகளிர் சுய உதவி குழுவாக பிரிந்து தங்களை அடையாளப்படுத்தும் விதமாக பல வண்ண சேலைகள் அணிந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர். இதில் 70 சுய உதவி குழுவினரும் தனித்தனியாக ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஒரே இடத்தில் தனித்தனி பானையில் பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பானை பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரம் செய்து கொண்டாடினர். தொடர்ந்து பொங்கலை வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். இதனையடுத்து சமைக்கப்பட்ட பொங்கலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்கி தங்களது மகிழ்ச்சியை சுய உதவி குழு பெண்கள் பகிர்ந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட 2000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன் புதிதாக புடவைகள் வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.