ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் தமிழ் அன்னை முன்பு சூரிய பொங்கல் வைத்து ஏர் உழவர் சங்கம் கொண்டாடியது.
தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். மேலும் தமிழர்களின் சிறப்பை பறைசாற்றும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழக அரசு இப்பண்டிகையை சமத்துவ பொங்கலாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் கொண்டாடி உற்சாகப்படுத்தி வருகிறது.
அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஏர் உழவர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து தமிழ் பற்றாளர்கள் திரண்டனர். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த பொங்கல் பானையில் பொங்கல் வைத்தனர். அப்போது பொங்கல் பொங்கியதும், கோஷம் எழுப்பி பொங்கலோ பொங்கல் என ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் செங்கரும்புகளை தோரணமாக்கி, வாழை இலையை விரித்து, பச்சரிசி, வெல்லம் கலந்த பொங்கலை படையலிட்டு, தேங்காய், பழம் வைத்து தமிழன்னை முன்னிலையில் சூரியனுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபட்டனர். வழிபாட்டின் போது அங்கு தமிழ் வளர்க சூரிய பகவானே தமிழ் கலாச்சாரம் வாழ்க வாழ்கவே என கோஷமிட்டு சூரிய பகவானுக்கு தங்களது நன்றி கடன் செலுத்தும் விதமாக வணங்கினர். அதனைத் தொடர்ந்து சாதி, மதம், பேதமின்றி அனைவருக்கும் விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது. முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஏர் உழவர் சங்க நிறுவனத் தலைவர் சுபா இளவரசன் தலைமையில் சிலம்பம் மற்றும் பரதநாட்டியம் ஆடிய மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதேபோல் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் திருவள்ளுவர் கேடயம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.