புது டெல்லி: இந்தியா குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, பாஜக எம்.பி.யும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில், “தவறான தகவல்களைப் பரப்பியதற்காக எனது குழு மெட்டாவை அழைக்கப் போகிறது.
எந்தவொரு ஜனநாயக நாட்டைப் பற்றிய தவறான தகவல் அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது. இந்தத் தவறுக்காக மெட்டா இந்திய நாடாளுமன்றத்திடமும் இங்குள்ள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார். ஒரு பாட்காஸ்டில் பேசிய மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், 2024 உலகம் முழுவதும் ஒரு பெரிய தேர்தல் ஆண்டு என்றும், இந்தியா உட்பட பல நாடுகளின் ஆளும் கட்சிகள் தேர்தல்களில் தோல்வியடைந்தன என்றும் தவறாகக் கூறினார்.
முன்னதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவரது கருத்துகளைக் கண்டித்திருந்தார். தனது எக்ஸ் பக்கத்தில், அவர் கூறியதாவது:- “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 2024 தேர்தலை 64 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுடன் நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியா உட்பட தற்போதைய அரசாங்கங்களில் பெரும்பாலானவை கோவிட்-19-க்குப் பிந்தைய 2024 தேர்தல்களில் தோல்வியடைந்துவிட்டன என்ற ஜுக்கர்பெர்க்கின் கூற்று உண்மைக்குப் புறம்பானது. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு, இலவச தடுப்பூசிகள் மற்றும் கோவிட் காலத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு உதவுவது முதல், இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மாற்றுவது வரை, பிரதமர் மோடியின் தீர்க்கமான 3-வது முறை வெற்றி அவரது நல்லாட்சிக்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் ஒரு சான்றாகும், ”என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.