புது டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்க இயக்குநரகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா, அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்க இயக்குநரகத்திற்கு அனுமதி அளித்ததை அடுத்து, உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, நவம்பர் 6-ம் தேதி தனது தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) கீழ், அரசாங்கத்தின் முன் அனுமதி இல்லாமல் பணமோசடி வழக்கில் ஒரு அரசு ஊழியரை கைது செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. முன்னதாக, அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர அமலாக்க இயக்குநரகத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை. சிபிஐ மற்றும் மாநில காவல்துறை போன்ற பிற புலனாய்வு அமைப்புகளுக்கும் அவை கட்டாயமாக இருந்தன.
இந்த சூழ்நிலையில், இந்தத் தீர்ப்பின்படி கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு அமலாக்க இயக்குநரகம் கடிதம் எழுதியிருந்தது. அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்க இயக்குநரகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அரசியல் களத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால், “என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்.
தேர்தலில் வெற்றி பெற்று, குற்றச்சாட்டுகளை மக்கள் பொய்யென நிரூபித்த பிறகு மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவேன்” என்று சபதம் செய்துள்ளார். டெல்லி சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்க இயக்குநரகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது டெல்லி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.