அமெரிக்கா: ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அதானி நிறுவனம் நிம்மதி பெருமூச்சு விடும். மேலும் அதானியின் பங்குகள் மீண்டும் உச்சத்தை தொடும் என்று தெரிய வந்துள்ளது.
இந்திய கார்ப்பரேட் நிறுவனமான அதானி நிறுவனம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை தொடுத்து வந்த ஹிண்டென்பெர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டென்பெர்க் நிறுவனம் (Hindenberg) பங்குச்சந்தை முதலீடுகள், உலகளாவிய வர்த்தகம் குறித்த பல ஆய்வுகளை வெளியிடும் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் ஹிண்டென்பெர்க் நிறுவனம், இந்திய கார்ப்பரேட் நிறுவனமான அதானி குழுமம் மீது அதிர்ச்சிகரமான மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
அதானி நிறுவனம் பல நாடுகளில் போலியான நிறுவன பெயர்களை தொடங்கி அதன் மூலம் தனது நிறுவனத்திற்கு முதலீடுகளை அதிகரித்து மோசடி செய்ததாக ஹிண்டென்பெர்க் குற்றம் சாட்டியது. இதனால் அதானியின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சியை சந்தித்தன. ஹிண்டென்பெர்க்கின் குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம் இதுகுறித்து ஹிண்டென்பெர்க் மீது வழக்குத் தொடர்வதாகவும் அறிவித்தது.
இந்நிலையில் தனது ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் ஆண்டர்சன் தற்போது அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதேசமயம் ஹிண்டென்பெர்க் நிறுவனம் மூடப்படுவதால் அதானியின் பங்கு மதிப்புகள் மீண்டும் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.