ராவல்பிண்டி: பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (72) தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்றார். 2022 தேர்தலில் இம்ரான் கானின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ராணுவ நெருக்கடி மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக அவரது அரசு பின்னர் கவிழ்ந்தது. இந்நிலையில், இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது பல்வேறு ஊழல் வழக்குகளுக்காக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
குறிப்பாக, இவரது பதவிக் காலத்தில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (50) இணைந்து ‘அல் காதர் அறக்கட்டளை’யை துவக்கினர். அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த பின்னரும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவி புஷ்ராவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி நசீர் ஜாவீத் ராணா நேற்று தீர்ப்பளித்தார். இம்ரான்கான் 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ளார். ஜாமீனில் இருந்த அவரது மனைவி புஷ்ரா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தீர்ப்பு வெளியானதும் புஷ்ராவை போலீசார் கைது செய்தனர்.
“நான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போல் இல்லை. பாகிஸ்தான் ராணுவத்துடன் நான் சமரசம் செய்து கொள்ளவில்லை. என்னை அரசியலில் இருந்து விலக்கி வைக்க, அரசியல் காரணங்களுக்காக என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன” என இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.