புதுடெல்லி: டெல்லியில் பாரத் மண்டபம், யசோபூதி மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய 3 இடங்களில் இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சியான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025ஐ பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். கண்காட்சி வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 5,100 சர்வதேச பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி, ஹூண்டாய், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகியவை இ-வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளன. 40-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் 21-ம் தேதி வரை யசோபூதியில் நடைபெறும் கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘வாகனத் துறையில் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியா சிறந்த இடமாகும்.
பசுமை தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் ஆகியவற்றின் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் EV கார் விற்பனை எட்டு மடங்கு அதிகரிக்கும். ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் ‘மேக் இன் இந்தியா’ முயற்சி பெரும் பங்காற்றியுள்ளது. இந்தத் துறையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்த ஆண்டு 12 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்,’ என்றார். 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பயனாளிகளுக்கு பிரதமர் மோடி இன்று விநியோகிக்கிறார். சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் உள்ள 50 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த சொத்து அட்டைகள் விநியோகிக்கப்படும்.