நெல்லை: நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு உயர்த்தி வசூலிக்கப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இந்நிலையில் விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் நேற்று முதல் சென்னை உள்ளிட்ட தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஸ்கள் மற்றும் ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ரெயில்களில் காத்திருப்பு பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.
தனியார் டிராவல்ஸ்களில் சாதாரண நாட்களில் இருக்கும் டிக்கெட் விலையை விட 2 முதல் 3 மடங்கு வரை டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு வழக்கமாக ஆம்னி பஸ்களில் ரூ. 800 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட வால்வோ பஸ்களில் சென்னை செல்ல ரூ.3 ஆயிரத்து 700 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. நாளை நெல்லையில் இருந்து சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் ரூ.4 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டாலும் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துவரும் நிலையில், தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.