சென்னை: ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநரே போலி அறிவியலை பரப்புவது பொருத்தமற்றது காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் கோ பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகிடும் என்றார்.
மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அறிவியலுக்கு புறம்பாக பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமக்கோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஐ.ஐ.டி. இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநரே போலி அறிவியலை பரப்புவது பொருத்தமற்றது,” என்று குறிப்பிட்டுள்ளார்.