கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. ‘காந்தாரா: அத்தியாயம் 1’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹெரூர் வனப்பகுதியில் கடந்த 2-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அங்கு வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும், வனப்பகுதியில் தீ வைத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் கூறி, அங்கிருந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வனப்பகுதியில் தீ வைப்பதால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதாக கூறிய அவர்கள், படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், படக்குழுவினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்ற வாலிபர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து படக்குழுவினர் மீது எசலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.