திருமலை: திருப்பதி கோயிலில் கடந்த 10 நாட்களில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 304 பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 10 நாட்களாக சொர்க்க வாசல் (வைகுண்ட துவார தரிசனம்) வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய கடந்த 10-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் 1.20 லட்சம் பக்தர்களுக்கு ரூ.300 கட்டண டிக்கெட் வழங்கப்பட்டது. கடந்த 10 நாட்களில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 304 பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் 1 லட்சத்து 83 ஆயிரத்து 132 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூ.34 கோடியே 43 லட்சத்தை காணிக்கையாகச் செலுத்தி இருந்தனர். அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் ஆகம சாஸ்திரப்படி சொர்க்கவாசல் கதவுகள் மூடப்பட்டன.