உத்தரபிரதேசம்: ஜூனா அகாரா முகாமில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐஐடி பாபா அபய் சிங் மற்றொரு துறவியின் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பிரம்மாண்டமான மகா கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுகின்றனர். மகா கும்பமேளாவுக்கு ஏராளமான துறவிகளும் வந்துள்ளனர்.
அந்த வகையில் ஐஐடி பாம்பேயில் பி.டெக். ஏரோஸ்பேஸ் [விண்வெளிப் பொறியாளராக] பயின்று பின் அதை துறந்து சன்யாசம் புகுந்த அரியானாவை சேர்ந்த அபய் சிங் கும்பமேளாவுக்கு வந்திருந்தார். ஐஐடி பாபா என்ற அடைமொழியுடன் அவர் இணையத்தில் வைரலானார்.
இந்நிலையில் தனது குரு மஹந்த் சோமேஷ்வர் புரியை அவமரியாதை செய்ததற்காக சாதுக்களின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றான ஜூனா அகாராவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அகாரா முகாமில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஜூனா அகாரா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒழுக்கமும் குரு பக்தியும் முதன்மையானது என்றும், இந்தக் கொள்கையைப் பின்பற்ற முடியாத எவரும் சன்யாசி ஆக முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூனா அகாராவின் தலைமை புரவலர் மஹந்த் ஹரி கிரி கூறுகையில், அபய் சிங்கின் செயல் குரு-சிஷ்ய மரபு மற்றும் சன்னியாசம் (துறவு) ஆகியவற்றுக்கு எதிரானது. நீங்கள் உங்கள் குருவை அவமதித்து, சனாதனத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டியுள்ளீர்கள். உங்கள் மனதில் மதத்திற்கோ அல்லது குருபீடத்திற்கோ எந்த மரியாதையும் இல்லை என்று கூறினார்.
ஒரு சமூக வலைதள ரீல் வீடியோவில் அபய் சிங், தனது தந்தை மற்றும் குருவுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக தெரிகிறது. ஜூனா அகாரா முகாமில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐஐடி பாபா அபய் சிங் மற்றொரு துறவியின் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.