புதுடில்லி: இந்தியா – ஜப்பான் கூட்டு முயற்சியில் மும்பை – அகமதாபாத் இடையில் புல்லட் ரயில் விடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நாட்டின் முதல் அதிவேக ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில்சேவை வாயிலாக இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் என்பது வெறும் இரண்டு மணி நேரமாக குறையும் என்கின்றனர். இந்த திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஏஜென்சி (JICA) 50 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கடனாக வழங்கியுள்ளது. இதற்கான வட்டி என்பது 0.1 சதவீதம் ஆகும். வரும் 2026-27ஆம் நிதியாண்டில் புல்லட் ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த திட்டத்தில் இரண்டு அதிவேக புல்லட் ரயில்களை இயக்கும் வகையில் 867 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இவை அதிகபட்சமாக மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். சராசரி இயக்க வேகம் 249 கிலோமீட்டராக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஜப்பான் நாட்டின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை மேம்படுத்து இ10 ஷின்கன்சென் என்ற புதிய அதிவேக புல்லட் ரயிலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை இந்தியா, ஜப்பான் என இரண்டு நாடுகளிலும் ஒரே நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆலோசித்து வருகின்றனர். இதற்காக 2029-30 நிதியாண்டு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.