டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதமாக வந்தன. கடும் மூடுபனி மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக பல விமானங்கள் இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தாமதமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டெல்லி சர்வதேச விமான நிலையத்தால் வெளியிடப்பட்ட எக்ஸ்-தள இடுகையில், புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் வருந்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.