புதுடில்லி: இந்திய உணவு தர நிர்ணய ஆணையம், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, பதஞ்சலி நிறுவனத்துக்கு 4 டன் மிளகாய் துாளை திரும்பப் பெறும்படி உத்தரவிட்டுள்ளது. சிவப்பு மிளகாய் துாள் உட்பட பல உணவுப் பொருட்கள் உற்பத்தியில், பூச்சிக்கொல்லி மருந்தின் அதிகபட்ச தடையினை இந்திய உணவுத் தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ளது.
இதற்குப் பிறகு, பதஞ்சலி நிறுவனத்தின் மிளகாய் துாளின் குறிப்பிட்ட சிப்பங்களை ஆய்வு செய்ததில், பூச்சிக்கொல்லி தடய விதிமுறைகள் பின்பற்றப்படாமையால், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அதிகாரிகள் அந்த சிப்பங்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.
பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் அஸ்தானா கூறியதாவது, 4 டன் மிளகாய் துாள் திரும்பப் பெறப்படும். அதே நேரத்தில், அந்த மிளகாய் துாளை வாங்கிய வாடிக்கையாளர்கள், அதை திருப்பி கொடுத்து, தொகையை பெற முடியும் என்று தெரிவித்தார்.