சென்னை: குறைந்த வட்டி என்று கூறி பின்னர் சிக்கலை இழுத்து விடும் ஆன்லைன் செயலிகளால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மிகுந்த விழிப்புணர்வு தேவை என்று சமூக ஆர்வலர் அர்பிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: வங்கியிலிருந்து அல்லது வங்கி ஊழியர் பேசுவதாக கூறி தங்களின் வங்கி கணக்கு , ஏ.டி.எம். கார்டு விபரம், ரகசிய எண், ஓ.டி.பி. எண் ஆகியவற்றை கேட்டால் தெரிவிக்க கூடாது.
உங்கள் இடத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளோம். பல லட்சம் முன்பணம், மாதந்தோறும் பல ஆயிரம் வாடகை தருவோம் என கூறி ஆவணங்கள் மற்றும் பணம் கேட்பார்கள். அப்படி பணம் அனுப்ப வேண்டாம். இதே போல் உங்களுக்கு அறிமுகமான நபர்களின் பெயரில் போலி பேஸ்புக் வாயிலாக அவசர தேவை பணம் அனுப்பும் படி கேட்டால் பணம் அனுப்பக்கூடாது.
தனியார் நிறுவனங்களின் பெயரில் போலியான வேலைவாய்ப்புகள் என்று வரும் குறுஞ்செய்தி, இ-மெயில், ஆன்லைன் வேலை இணைய லிங்க் வாயிலாக விளம்பரங்களை அனுப்பி பணம் அனுப்ப கூறினாலும் அனுப்ப கூடாது.
இதேபோல் பைக்குகள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக போலி விளம்பரங்களை அனுப்பி குறிப்பிட்ட தொகை கேட்டால் பணம் செலுத்த வேண்டாம். அறிமுகம் இல்லாத எண் மூலம் வரும் ஆபாச வீடியோ அழைப்பை பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் அதுபோன்ற அழைப்பை ஏற்க வேண்டாம். தனியார் கடன் செயலி மூலம் குறைந்த வட்டியில் கடனாக பெறலாம் என்று செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி கடன் வாங்க வேண்டாம்.
அவ்வாறு வாங்கும் கடன் தொகையை செலுத்த தாமதம் ஆகும் போது, பதிவு செய்த தனிப்பட்ட விபரங்கள் மூலம் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் புகைப்படங்களை திருடி ஆபாசமாக சித்தரித்து, மிரட்டி பணம் பறிக்கக்கூடும். மேலும் உங்களை பற்றி தவறான தகவல்கள் அனுப்பக்கூடும். இதனால் அதுபோன்ற செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம். இதுகுறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.